முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளில் கேரள அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி, ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மண் மற்றும் பாறைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
முல்லை பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கடந்த 1979-ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வரும் கேரள அரசு, கடந்த 2007-ஆம் ஆண்டு புதிய அணையை கட்டும் முயற்சியில் இறங்கியது. இதனிடையே, முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதாகவும், 142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய முல்லை பெரியாறு அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசுக்கு, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து, புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை அம்மாநில அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து ஆயிரத்து 500 மீட்டர் தொலைவில் உள்ள தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட இடத்தில் ஆள்துளை கிணறு அமைக்கப்பட்டது.
முதற்கட்டமாக 20 அடி நீளமுள்ள ஐந்து குழாய்கள் 100 அடி ஆழத்துக்கு பூமிக்குள் இறக்கப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. புதிய அணையின் ஆய்வுக்காக 30 இடங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருந்தன. இதில் 15 இடங்களில் கடந்த 2007 ஆம் ஆண்டே ஆய்வு நடைபெற்றது. தற்போது மீதமுள்ள 15 இடங்களில் மண் மற்றும் பாறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment