சர்வதேச செவிலியர் தினம்
சமூகப்பணியில் முக்கிய அங்கம் வகிக்கும் செவிலியர்களின் சேவையைப் போற்றும் வகையில் சர்வதேச செவிலியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
நவீன செவிலி முறையின் முன்னோடி எனக் கருதப்படும் ப்ளாரன்ஸ் நைட்டிங்கேலை சிறப்பிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான மே 12, சர்வதேச செவிலியர் தினமாக அறிவிக்கப்பட்டது.
1854-ஆம் ஆண்டு கிரைமியப் போரின் போது காயமுற்ற ராணுவ வீரர்களை நைட்டிங்கேல் கவனித்ததைத் தொடர்ந்தே அவர் 'லேடி வித் த லேம்ப்' என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டார். இந்நாளில் சர்வதேச நாடுகள் பலவற்றிலும் சிறப்பாக பணியாற்றும் செவிலியர்களுக்கு விருதுகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
1965 ஆம் ஆண்டு முதல் செவிலியர் தினம் என்பது கொண்டாடப்பட்டு வந்தாலும், 1974-ஆம் ஆண்டே மே 12 -சர்வதேச செவிலியர் தினமாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவுக்கான தூதரானார் விஜயலட்சுமி பண்டிட்
முதன் முதலில் அதிகாரப்பதவியில் அமர்ந்த இந்தியப் பெண் என்ற பெருமைக்குரியவர், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்.
1953 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொது அவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இந்திய அரசின் தூதராக பல்வேறு நாடுகளில் பணியாற்றியவர். 1947 முதல் 1949 ஆம் ஆண்டு வரை சோவியத் யூனியனுக்காக இந்தியத் தூதராகப் பணியாற்றிய அவர், அதன் பின்னர் அமெரிக்காவிற்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். அமெரிக்காவிற்கான தூதராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற அடையாளத்துடன் தனது பணியைத் தொடங்கியது 1949-ஆம் ஆண்டு மே 12-இல் தான்.
No comments:
Post a Comment