நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, மாநிலங்களவையில் கருப்புப் பண மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் காங்கிரஸ், அதிமுக, இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்களது கருத்துகளையும், ஐயங்களையும் தெரிவித்தனர்.
இதற்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்து பேசினார். இதைத்தொடர்ந்து கருப்புப் பணம் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
வெளிநாடுகளில் கணக்கில் வராத சொத்துக்களை பதுக்கினால் அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. கருப்புப் பண பதுக்கலை ஒப்புக்கொண்டால் முப்பது சதவிகிதம் வரியும், முப்பது சதவிகிதம் அபராதம் மட்டும் விதிக்கப்படும்.
அரசு வாய்ப்பளித்தும் கருப்புப் பண பதுக்கலை மறைத்தால், முப்பது சதவிகிதம் வரியும், 90 சதவிகிதம் அபராதமும் விதிக்கப்படும். கருப்புப் பணம் பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டால் கிரிமினல் வழக்கு தொடரவும், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள கருப்புப் பண மசோதா வழிவகை செய்கிறது. இதனிடையே, விவாதத்திற்குப் பிறகு கம்பெனிகள் சட்டத்திருத்த மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment