TRB,TNTET,TNPSC online coching

Search This Blog

NEWS

https://trb-tntet-tnpsc.blogspot.in/வழங்கும் இலவச இணையதள பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம்.தன்னம்பிக்கை, விடா முயற்சி , கடின உழைப்பு. எந்த சோதனைகள் வந்தாலும் உங்கள் இலட்சியத்தை விட்டு விடாதீர்கள். "சரியான முயற்சியும் பயிற்சியும் இருந்தால் உங்களால் முடியாத ஒன்றுமே இல்லை" என்ற நம்பிக்கை உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நிறைந்திருக்க வேண்டும். அதற்காக எங்கள் இணைய தளத்தின் மூலம் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வோம்.பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலாத வேலைதேடும் இளைஞர்கள், பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் தங்களது அரசு வேலை கனவுகளை நனவாக்குவதற்காகவே இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. TET ன் புதிய பாடத்திட்டத்திற்கேற்ப ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் வாரத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வாரத்தேர்வின் முடிவுகள் உங்கள் பெயருடன் இந்த இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்.

Wednesday, April 29, 2015

வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!


வெளி நாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்கள் நிறைய செய்திகளை தெரிந்துகொண்டு செல்ல வேண்டும்.
 பல நாடுகளில் மாணவர் விசா என்பது, ஒரு குறிப்பிட்ட பல்கலையில், குறிப்பிட்ட படிப்பிற்காக வழங்கப்படுகிறது. உங்களது பாஸ்போர்ட்டில் ஒட்டப்பட்ட மாணவர் விசாவில், நீங்கள் அந்த நாட்டில் நுழையும் தேதி குறிப்பிடப்படும்.விசாவைப் பெற்றவுடன், அதில் ஏதேனும் பிழை இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். பதிவுக்காக, அதை ஸ்கேன் செய்து நகலெடுக்கவும்.

நீங்கள் பல்கலையை மாற்ற விரும்பினால், தூதரகத்திடம் அது தொடர்பாக தெரிவித்து, முறையான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும். பல நாடுகள் மல்டிபல்- என்ட்ரி ஸ்டூடண்ட் விசாவை வழங்குகின்றன. இதன்மூலம், ஒரு மாணவர், தான் படிக்கும் காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த நாட்டிற்குள் சென்று வரலாம். ஆனால், சில நாடுகள், சிங்கிள் என்ட்ரி விசாவை வழங்குகின்றன. எனவே, தேவைப்படும் போது அதை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

விசா விண்ணப்பத்திற்கு தேவையானவை -
1.பல்கலையில் இருந்து பொருத்தமான அசல் சேர்க்கை ஆவணங்கள்.
2.அசல் கல்விச் சான்றிதழ்கள்( ஆங்கிலத்தில் இல்லையெனில் மொழிபெயர்ப்பு தேவை)
3.அசல் தேர்வு முடிவுகள்.
4.அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இருந்து பெறப்பட்ட நிதி ஆவணங்கள்.
5.வங்கிக்கடன்
6.தங்குமிடம்
7.அட்வான்ஸ் ட்யூஷன் டெபாசிட் சான்று
8.உதவித்தொகை கடிதம்
9.புகைப்படங்கள்
10.விசா கட்டணங்கள்


பல மாணவர்கள், தங்களின் பாஸ்போர்ட் என்ன நிலையில் இருக்கிறது. அதன் செல்லத்தக்க காலம் எவ்வளவு என்பன போன்ற விஷயங்களை கவனிக்க தவறி விடுகின்றனர்.செல்லத்தக்க காலம்முடிந்து போதல், பாஸ்போர்ட் மோசமாக சேதமடைந்திருத்தல் உள்ளிட்ட பல காரணங்களால் அவர்களுக்கு கிடைக்கும் பல அரிய வாய்ப்புகள் நழுவி விடுகின்றன.

வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் பலரும், கடைசி நேர நெருக்கடிகளுக்கு உள்ளாகி, வாய்ப்பை கோட்டை விடும் நிலை வரை செல்வது பாஸ்போர்ட் விஷயத்தில் தான்.
பாஸ்போர்ட் விஷயத்தில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், புகைப்படம். பல வருடங்களுக்கு முன்பாக அது எடுக்கப்பட்டிருந்தால் கட்டாயம் மாறுதல் தேவை. ஏனெனில், அதில் நீங்கள் சிறுவனாகவோ அல்லது சிறுமியாகவோ இருப்பீர்கள். இப்போது உங்களின் தோற்றம் மிகவும் மாறுபட்டிருக்கும்.

பாஸ்போர்ட் மற்றும் விசா விஷயத்தில் கவனிக்க வேண்டியவை முக்யமானவை -
நீங்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, உங்களின் பாஸ்போர்ட் குறைந்த பட்சம் 6 மாதங்கள் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். பல நாடுகளில் இதுதான் நடைமுறை.தேர்வு முடிவுகள் வெளியாகி, சேர்க்கை கிடைப்பது 100% உறுதியான பிறகு தான் விசா நடைமுறைப் பணிகளை துவங்க வேண்டும் என பல மாணவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், அது தவறு. பல நாடுகள், மாணவர் விசாவுக்காக விண்ணப்பித்தலை குறைந்த பட்சம் படிப்பு தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாக அனுமதிக்கின்றன. வெளிநாட்டு பயணத்திற்கான ஏற்பாடுகளை குறைந்தது 6 மாதங்களுக்கு முன்பாகவே துவங்க வேண்டும்.

அதன் மூலம், உங்களின் விசாவுக்கான ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்ள முடியும்.மாணவர்கள் விசா விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்களை சரியான முறையில் சேகரித்து வைத்து கொள்ள வேண்டும். விசா விதிமுறை அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும்.

எனவே, சில வருடங்களுக்கு முன்பாக அல்லது 1 வருடத்திற்கு முன்பாக வெளிநாட்டிற்கு படிக்க சென்ற உங்களின் நண்பர்கள் கூறுவதை அப்படியே நம்பிவிட வேண்டாம். ஏனென்றால், அவர்கள், அவ்வப்போது மாறிக் கொண்டிருக்கும் விதிமுறை பற்றி முழுமையாக அறிந்திருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை.

எனவே, ஒரு சிறந்த வழிமுறை என்னவெனில், நீங்கள் எந்த நாட்டிற்கு கல்வி கற்பதற்காக செல்ல விரும்புகிறீர்களோ, அந்த நாட்டின் குடியேற்றம் மற்றும் கல்வி தொடர்பான இணையதளத்திற்கு சென்று விதிமுறைகள், தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் சமீபத்திய மாற்றங்களை பற்றி அறிந்து கொள்ளவும்.

No comments: