தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா என்ற தர்மராஜ் (வயது 40). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிப்பவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உஷா (36). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் உஷா கர்ப்பம் அடைந்தார். நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய ராஜா தனது மனைவியை திருச்சியில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
அவர்கள் இரவு 7 மணியளவில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவாக்குடி சுங்கச்சாவடி அருகே வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் ராஜாவின் வாகனத்தை மறித்து ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கேட்டார். ஆஸ்பத்திரிக்கு செல்லும் அவசரத்தில் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
ஆனால் அவரை மற்றொரு போலீஸ்காரருடன் துரத்தி சென்ற இன்ஸ்பெக்டர் காமராஜ், பெல் கணேசா ரவுண்டானா அருகே ராஜாவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தார். இதில் நிலை தடுமாறிய ராஜா நடுரோட்டில் மனைவியுடன் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் உஷா மீது மோதியது. இதில் உஷாவுக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. அத்துடன் ரத்தப்போக்கும் அதிகமாகி நடுரோட்டில் உயிருக்கு போராடினார். காதிலிருந்தும் ரத்தம் வழிந்தது. உடனடியாக ராஜா மற்றும் உஷாவை 108 ஆம்புலன்சு மூலம் துவாக்குடியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே உஷா பரிதாபமாக இறந்தார்.
அனைவரையும் அதிர்ச்சியடைய செய்த இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஆயிரகணக்கானவர்கள் கூடி சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த முயன்றும் முடியவில்லை.
எனவே போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த தடியடியில் 50-க்கும் மேற்பட்டோர் மண்டை உடைந்து காயம் அடைந்தனர். மேலும் போலீஸ் ஜீப் உள்பட 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. வாகனங்களை சேதப்படுத்தியதாக சிலரை போலீசார் பிடித்து சென்றனர். 15 பேர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.
நள்ளிரவு 12 மணி வரை நீடித்த இந்த போராட்டம் பின்னர் சிறிது சிறிதாக விலக்கி கொள்ளப்பட்டது.
இதற்கிடையே கர்ப்பிணி பெண் உஷாவின் சாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருவெறும்பூரில் பெண் உஷா உயிரிழப்பு சம்பவம் பற்றி நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஷ்வதாமன், டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
அப்போது கர்ப்பிணி பெண் உஷா உயிரிழப்பு சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். போலீஸாரின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது, சட்டவிரோதமான செயல். திருவெறும்பூர் சம்பவம் கிரிமினல் குற்றத்துக்கு சமமானது என கூறி உள்ளார்
No comments:
Post a Comment